Today result for Election Commission cancelled RK Nagar bypoll

பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி, ஆர்.கே.நகர் இடை தேர்தல் நிறுத்தப்பட்டதால், தமிழகத்தின் தலையெழுத்து மாறி போயுள்ளது.

தமிழ் நாட்டில் ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஆர்.கே.நகரை தவிர மற்ற 10 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி அடையும் தருவாயில் இருக்கிறது. மற்ற இடங்களில் அந்தந்த மாநில கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் திட்டமிட்டபடி நேற்று நடந்திருந்தால், இன்று முடிவு வெளியாகி, தமிழகத்தின் தலை எழுத்தே மாறி இருக்கும்.

ஏனெனில், அதிமுக மூன்றாக பிளவுபட்டு இருப்பதால், யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இது கருதப்பட்டது.

மறுபக்கம், ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் வெற்றி வாய்ப்பை சோதிக்கும் தேர்தலாகவும் இது சொல்லப்பட்டது.

அதன் காரணமாகவே, தினகரன் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து ஓட்டுக்களை வளைக்க முயன்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெயலலிதாவின் மரண மர்மங்கள் குறித்து ஓ.பி.எஸ் அணி பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால், ஆரம்பத்தில், திமுகவுக்கும்-பன்னீர் அணிக்கும் கடும் போட்டி நிலவியது என்றும் தினகரன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்றும் கருத்து கணிப்புகள் கூறின.

ஆனால், தேர்தல் நெருங்க, நெருங்க தினகரனின் பண பலம், ஓ.பி.எஸ் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு, முன்னேறியதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாகவே, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஒருவேளை தேர்தல் நடந்து, திமுக வெற்றி பெற்றிருந்தால், அதிமுகவின் இரு அணிகளில் எந்த அணி கூடுதலாக வாக்குகளை பெறுகிறதோ, அந்த அணி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கும்.

அப்படி இல்லாமல், தினகரன் வெற்றி பெற்றிருந்தால்,உண்மையான அதிமுக நாங்களே என்று அவர் கூறி இருப்பார்.

ஓ.பி.எஸ் அணி வெற்றி வாகை சூடி இருந்தால், அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அவர் பக்கம் சாய்ந்திருப்பார்கள்.

இப்படி எதுவுமே, நடக்க விடாமல், பண விநியோகம் என்ற காரணத்தால் தேர்தலை நிறுத்தியதால், தமிழகத்தின் தலை எழுத்தே மாறி போயுள்ளது.