நாட்டின் 14-வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபையிலும் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதில் பா.ஜனதா தலைமையிலன தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார்.

ஜூலை 24-ந் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 14-ந்தேதி அறிவிக்கை வௌியிட்டது.

ஜூலை 17-ந் தேதி (நாளை) தேர்தலும், 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இரு கூட்டணியின் வேட்பாளர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், பீகார் ஆளுநராக இருந்தவருமான ராம் நாத் கோவிந்த் கடந்த மாதம் 19-ந்தேதி அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்து, கடந்த ஒரு 20 நாட்களுக்கு மேலாக அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு 20 மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு இருக்கிறது.

அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் போட்டியிடுகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டும் 48.6 சதவீத வாக்குகள் உள்ளன. அதாவது 16 கட்சிகளின் ஆதரவு ராம் நாத் கோவிந்துக்கு இருக்கிறது.

இதில் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்காத அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐ.என்.எல்.டி. ஆகிய கட்சிகளும் சேர்ந்துள்ளதால், 61 சதவீத வாக்குகள் வரை ராம் நாத் கோவித்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பெற்றாலே வெற்றிகிட்டும் என்பதால், 60.30 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவும், எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்கள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்டிரய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகள் ஆதரவு இருக்கிறது.

இருந்தபோதிலும், ஓட்டுக்களின் அடிப்படையில் 39.70 சதவீதம் கிடைக்கலாம் என்பதால், வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவில் நாடு முழுவதும் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர்.எம்.பி.க்கள் அனைவரும் வாக்களிக்க நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அந்தந்த மாநில சட்டசபையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அறையில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்களிப்பு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ., மக்களவை எம்.பி.க்கள்,  மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களித்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் என 4 ஆயிரத்து 896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 4ஆயிரத்து 120 எம்.எல்.ஏ., 776 எம்.பி.க்கள் அடங்குவர். எம்.எல்.சி.கள், நியமன எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதியில்லை.

இதற்கிடையே மொத்தமுள்ள 776 எம்.பி.களில் 13 பேரின் பதவி காலியாக இருக்கிறது என்பதால், 763 பேர் மட்டுமே வாக்களிக்க இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 32 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று நாடாளுமன்றத்திலும், மற்றவை சட்டசபையிலும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்களாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்கும் போது, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஆதரவு வேட்பாளர் பெயருக்கு பக்கத்தில் டிக் செய், பிரத்யேக ‘மார்க்கர்’ பேனாக்கள் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட உள்ளன.

இந்த பேனாக்களும், அதில் பயன்படுத்தப்படும் மை மைசூரில் ஒரு தொழிற்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கும்.