* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். ஆனால் ஆளுங்கட்சிக்கும், ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் எதிர்க்கட்சிக்கும் இதைப்பற்றி கவலையே இல்லை. இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்தனர் இப்போது தன் கட்சிக்காரர்களையும் ஏமாற்றத் துவங்கியுள்ளனர் - மக்கள் நீதி மய்யம்

*  தை பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை தேசிய நறுமண பொருட்கள் வாரியத்திடம் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. தரமற்றதை கொடுத்து  மக்களை சங்கடப்படுத்தாமல், தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கிட வேண்டும்! என கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசை வேண்டுகின்றனர் - பத்திரிக்கை செய்தி

*  உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதாக தமிழக முதல்வர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தலை நடத்த வேண்டும். ஒரு வேளை முறைப்படுத்தப்படாமல் தேர்தல் நடத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், அதையும் சந்திப்போம்- மு.க.ஸ்டாலின்

*  தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஒன்றும் அறியாத சின்னக் குழந்தை போல் இருப்பது வருத்தமளிக்கிறது. இன்னமும் அவர் அரசியலில் ‘பேபி’யாக உள்ளார். அறுபது வயதுக்கு மேல் குழந்தை! என்பது போல குழந்தையாகிவிட்டார். துணை முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்! ஆனாலும் ஏன் ஒன்றும் தெரியாதவராய் இருக்கிறார்? - ஜெயக்குமார்

*  இலங்கையில் 1.37 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்! என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதித்து போராடினோம். இப்போது அவரது தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபயவையும் எதிர்த்து போராடுகிறோம் 
- வைகோ

*  உள்ளாட்சி தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் துவங்கி, மேயர் பதவி வரையில் எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்! என மாநில தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். இட ஒதுக்கீடு விவகாரத்தையும் ஒழுங்காக  பின்பற்றவில்லை. இவற்றை செய்த பிறகு தேர்தலை நடத்துங்கள், என வலியுறுத்தினோம் - கிரிராஜன்

*  மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது பா.ஜ.க.வை சிறந்த அரசு என்று பாராட்டியது. இப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. இதை பொறுக்க முடியாத ஸ்டாலின், எங்களைப் பார்த்து அடிமை அரசு என கூறுகிறார்! இது என்ன நியாயம்? - எடப்பாடி பழனிசாமி

*  சமையலுக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான வெங்காயம் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு விலை அதிகரித்துவிட்டது. வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்தியரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? -   கனிமொழி

*  நாடு முழுவதும் நான்கரை கோடி வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்தியரசு தடை செய்ய வேண்டும். ஆன் லைன் வர்த்தகம் தொடர்ந்தால், ஒரு கோடி பேர் வேலையின்றி தவிப்பர் - வசந்தகுமார்