*  ரஜினி  - கமல் இணைவதால், அரசியலில் பெரும் மாற்றம் வரும் என சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் இணைந்து நடித்து, படம் எடுத்தால் கூட ஓடுமா என்பது சந்தேகம்தான். அரசியல் என்பது சினிமா போல் ஐந்து பாட்டும், பத்து சண்டை காட்சிகளும் வைத்துவிட்டால் வெற்றி பெறலாம் என கருதக்கூடாது. அரசியல் என்பது இரண்டரை மணி நேரம் ஓடும் படம் அல்ல. நெருப்பாற்றை நீந்தி கரை சேர வேண்டும் 
- வைகை செல்வன்.

*  முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தின் மீது பொய் வழக்கு போட்டு நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்கு சிதம்பரம் வந்தபோது, அவர் முகத்தில் எந்த சோர்வும் காணப்படவில்லை. மிகவும் மன உறுதியோடு அவர் இருக்கிறார்! என அவரைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர் 
- கே.எஸ்.அழகிரி

*  தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தடை கோரி, தினகரனின் ‘வலது கரம்’ போல விளங்கிய பெங்களூரு புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்கட்சியை பதிவு செய்ய, பிரமாணப்பத்திரம் அளித்திருந்த 14 பேர் இப்போது அந்த கட்சியில் இல்லை. எனவே அக்கட்சியை பதிவு செய்யக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
- பத்திரிக்கை செய்தி


*  தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, அடுக்கடுக்காக பல திட்டங்களை அறித்து, ஜெயலலிதாவின் கனவை தமிழக முதல்வர் இ.பி.எஸ். நிறைவேற்றி வருகிறார். ஜெயலலிதா ஆசியுடன் இந்த செயல்களை முதல்வர் இ.பி.எஸ். செய்து வருகிறார் 
-    கருப்பணன்

*  ஒரு காலத்தில் நமக்கு படிப்பு வராது! என்றனர், படிக்கக் கூடாத மக்கள்! என்றனர். ஜாதி காரணமாக, மனு தர்மம் காரணமாக படிக்க விடவில்லை. மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள், வெற்றி பெற கூடாது 
- கி.வீரமணி


*  உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை. ஆனால் நாங்கள்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறோம் என மக்களிடம் தவறான தகவலை, முதல்வர் இ.பி.எஸ். கூறி பிரச்னையை திசை திருப்பி வருகிறார் - ஸ்டாலின்

*  அதிபரானதும் முதன் முறையக இந்தியா வந்துள்ளேன். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் பதவி காலத்தில் இந்தியா - இலங்கை உறவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே, நீண்ட கால உறவு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் 
-கோத்தபய ராஜபக்‌ஷே

*  அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் விளைவாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,  தேர்தலை கண்டு அஞ்சுகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து பணிகளையும் செய்துவிட்டோம். இப்போது உச்ச நீதிமன்றம் சென்று, தேர்தலை நிறுத்த  யார் முயற்சிக்கின்றனர் என்பதை மக்களே தெரிந்து கொள்ளட்டும் - எடப்பாடி பழனிசாமி

*  எம்.ஜி.ஆரை போல, அனைத்து தாய்க்குலங்களையும் மதித்து வருகிறேன். என் படங்களில் கூட பெண்களை போற்றியுள்ளேன். அவர்களை தவறாக காட்டியதே இல்லை. என் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. வேலையில் ஆண்களைப் போல் பெண்கள் போட்டி போடலாம். ஆனால் ஆண்களைப் போல் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்- கே.பாக்யராஜ்