சென்னையில் மரணமடைந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் உடல் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை திராவிட இயக்க பாராம்பரியப்படி அடக்கம் செய்யப்படும் என திவாகரன் தெரிவித்துள்ளார்.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நடராஜனின்  இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் வந்தடைந்தார்.

இந்நிலையில், நடராஜன் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியளாள்ர்களிடம் பேசிய  அவர், தங்கள் குடும்ப வழக்கப்படி நடராஜனின் உடல் எரியூட்டப்பட வேண்டும். ஆனால் நடராஜன் திராவிட இயக்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர் என்பதால், திராவிட பாராம்ரியப்படி இன்று  நல்லடக்கம்  செய்யப்படும் என திவாகரன் தெரிவித்தார்.