நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2019–20–ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டைத்தான் கடந்த பிப்ரவரி 1–ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

2019–20–ம் நிதி ஆண்டின் முதல் 4 மாத காலத்துக்கு, அதாவது புதிய அரசு பதவி ஏற்று, முழு பட்ஜெட் தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நடைமுறையில் இருந்து வருகிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்த இடைக்கால பட்ஜெட் உதவியது.

இப்போது தேர்தல் நடந்து முடிந்து, பாஜக  கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30–ந் தேதி பதவி ஏற்றது. நிதி அமைச்சராக  தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்
.
பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019–20–ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.

பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார். இது அவரது முதல் பட்ஜெட் 
கடைசியாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, பாரதீய ஜனதா கட்சி முதலில் ஆட்சிக்கு வந்த 2014–ம் ஆண்டு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்து அனைவரும் ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளனர். 

இந்த ரூ.2½ லட்சம் என்பதை இரு மடங்காக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனாலும், ரூ.2½ லட்சம் என்பது ரூ.3 லட்சம் என்ற அளவிலாவது உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரியை மேலும் எளிமை ஆக்கி அதற்கான அறிவிப்பும் வெளியாகக்கூடும்.

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் (வருமான வரி சட்டம் பிரிவு 80–டி) விலக்கு உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் என உயர்த்தப்படும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பொது பட்ஜெட்டுடன் ரெயில் பட்ஜெட்டும் இணைந்தே தாக்கல் ஆகும் என்பதால் ரெயில் கட்டணம், சரக்கு கட்டணம், முன்பதிவு கட்டணம், பிளாட்பார கட்டணம் உயர்த்தப்படுமா என்பதுவும் இன்றைய பட்ஜெட்டில் தெரியவரும். அதே போன்று புதிய ரெயில்கள் விடப்படுவது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..