*    தேசிய மற்றும் மாநில கட்சிகள் அ.தி.மு.க.வில் இணைந்து கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. யார் யார் என்பது பரம ரகசியம். ரகசிய முடிச்சு அவிழ்க்கப்பட்ட உடன் தெரியும்: ஓ.பன்னீர்செல்வம். 
(அப்பூ, அது ரகசிய முடிச்சுன்னு பொத்தாம் பொதுவா சொல்லியிருக்கீக. முடிச்சுன்னா எப்படி சுருக்காணி போட்டதா, இல்ல தடிமனான முடிச்சா? இல்ல ஸ்டேபிளர் போட்டிருக்கீங்களா....விரிவா சொல்லுங்கப்பு)

*    1999  சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டோம். அப்போது எனக்கு தோழமையாக நின்று ஆதரவு தந்தவர் கே.எஸ்.அழகிரி: தொல்.திருமாவளவன். 
(நல்லவேளை தல, த.மா.கா. கூட நீங்க கூட்டணி வெச்சிருந்தீங்க. ஒரு வேளை ம.தி.மு.க. கூட்டணி வெச்சிருந்து அவரு வைகோ கூட களமிறங்கியிருந்தால் இன்னைக்கு அழகிரி நிலை எப்படி இருந்திருக்கும்? அப்படின்னு காங்கிரஸுல பேசிக்கிறாய்ங்க.)

*    ஆதிக்க இந்திக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு, தாமொழியை காப்பதற்கு அரண் அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் கண்ட இயக்கத்தை வெற்றி பெற செய்திடுவோம்: மு.க. ஸ்டாலின். 
(ஆதிக்கமன இந்தி மொழி வேணாம்னா, டெல்லி பக்கம் நீங்க ஒதுங்காம இருக்குறது. தமிழ்நாடு  அரசியலே போதும்னு  இருந்துட வேண்டிதானே ஜி., அதைவிட்டுட்டு இந்தியை எங்ககிட்ட திட்டுறது, அப்புறம் ராகுல் கூட வட இந்தியா டூர் போறது. என்னாங்க சார்  உங்க அரசியலு?)

*    ஏஸி அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு விவசாயிகளுக்கு மத்தியரச்யு தரும் ஆறாயிரம் ரூபாயின் அருமை நிச்சயம் தெரியாது. ஏழை விவசாயிகள் இதன் மூலம் பலனடைவர் என்பது அவர்களுக்கு புரியாது: நரேந்திர மோடி.
(ஆமாங்க ஏழைத்தாயின் மகனே! கஜா புயலடிச்சுட்டு இருக்கும்போதே நீங்க ஓடோடி வந்து தென்னை மரங்களை கட்டிப்பிடிச்சுட்டு அழும்போதே நினச்சோம். அந்த காட்சியெல்லாம் வெளியே வராம மறைச்சுட்டாங்க.  விவசாயிங்க பிரச்னை, வெயில்ல அலையுற உங்களுக்குத்தானே புரியும்! பேசுங்க, நீங்க பேசுங்க ஜி)

*    டி.டி.வி. தினகரன் ஒரு சர்வாதிகாரி. ஒரு விஷக்கிருமி. கிச்சன் கேபினட் நடத்திக் கொண்டு, தன்னை நம்பி வர்றவங்களை இம்சை பண்றார். இதனாலதான் அவரை விட்டு எல்லாரும்  விலகி ஓடுறாங்க: திவாகரன். 
(கரெக்டா சொன்னீங்க தல. அம்மா ஆட்சி செஞ்சப்ப நீங்க, சசிகலாவெல்லாம் எவ்வளவு சாத்வீக மனுஷனாகவும், அடிமட்ட தொண்டனுக்கு அடிமட்ட தொண்டாக நடந்துக்கிட்டீங்கன்னு ஒலகம் அறியும். அந்த நல்ல பண்பெல்லாம் யாருக்குய்யா வரும்?)