ஐந்தாவது கட்டமாக ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 
 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஐந்தாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்து வாக்களித்துவருகிறார்கள். பல தொகுதிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துவருகிறார்கள்.


உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி, சோனியா போட்டியிடும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் துணை ராணுவப் படையினருடன் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். 
குறிப்பாக மேற்கு வங்காளத்தில் 4-ம் கட்டத்தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், ஐந்தாம் கட்டத்தேர்தலில் துணை ராணுவப் படையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இறுதிகட்டத் தேர்தலை சந்திக்கும் காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் முறையே 6 மற்றும் 7-ம் கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெற உள்ளது.