To defeat mahachor BJP we can support chor Congress Hardik Patel
மகா திருடனான பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக, சிறிய திருடனான காங்கிரசை ஆதரிப்போம் என, ஹர்திக் படேல் கூறினார்.
குஜராத்தில் கணிசமாக வசித்து வரும் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
‘பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த அமைப்பினரின் ஆதரவை பெற பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக ஹர்திக் படேலை, காங்கிரசில் சேருமாறு மாநில தலைவர் பரத்சிங் சோலங்கி நேரடியாகவே அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆமாதாபாத்தில் நேற்று ஹர்திக் படேலை ஓட்டலில் சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
அதே நேரத்தில் ஹர்திக் படேல் ஓட்டலில் இருந்தது உறுதி செய்யப்பட்டது, ஆனால் இருவரும் சந்தித்தனர் என்ற செய்தி மறுக்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே ஹர்திக் படேல் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஹர்த்திக் படேல் காங்கிரசை சிறிய திருடன் என்றும், பா.ஜனதாவை மிகப்பெரிய (மகா) திருடன் என்றும் வர்ணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு குஜராத்தில் மண்டாலில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஹர்திக் படேல், இது குறித்து கூறியதாவது-
“காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று நான் ஞாயிறு காலை மூன்று மணியளவில் ஓட்டலுக்கு சென்றேன்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கெலாட்டை (முன்னார் ராஜஸ்தான் முதல்-அமைச்சர்) சந்தித்து பேசினேன். நீண்ட நேரமாகியதால் ஓட்டலில் தங்க முடிவு செய்தேன்.
ஊடகத்தினர் குவிந்ததன் காரணமாகவே என்னால் ஓட்டலில் இருந்து விரைவாக வெளியேற முடியவில்லை. ராகுல் காந்தியை நான் சந்தித்து பேசவில்லை, ஆனால் நான் பேசியதாக மீடியாக்கள் கூறிவிட்டன.
“காங்கிரஸ் ஒரு திருடன்தான், ஆனால் பாரதிய ஜனதா மிகப்பெரிய திருடன். மிகப்பெரிய திருடனை தோற்கடிக்க வேண்டும் என்றால், நாம் சிறிய திருடனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், அதனை கொடுப்போம். பொறுமையாக இருங்கள், உடனடியாக ஆதரவு கொடுக்காதீர்கள்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
