கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக அரசு மீது அவப்பழியை திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி சுமத்துகிறார் என்று தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதனால், மின்கட்டணம் கணக்கீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் மாத மின் கட்டணத்தையே மின்சார வாரியம் செலுத்த அறிவித்தது. ஆனால், இப்போது மின் பயனீட்டை அளவிட்ட பிறகு நுகர்வோருக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மின் கட்டணத்தில் பகல் கொள்ளை அடிப்பதாக அதில் குறிப்பிட்டு அமைச்சர் தங்கமணியையும் விமர்சித்திருந்தார்.

 
மேலும், “மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும். மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? எப்பொழுதும் இல்லாத அளவில் ஒவ்வொரு வீட்டிலும் மின்கட்டணம் வந்திருக்கிறது. எங்கள் மாவட்டமான கரூர் செல்லாணடிபாளையத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பில்லாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெறும் ஐம்பது ரூபாய் கட்டிய விவசாயி அவர். நூறு யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு மின் கட்டணமே கட்டாத விவசாயிக்கு லட்சத்தில் பில். இது ஒரு சோற்றுப்பதம்தான். மின்கட்டணம் செலுத்துகிற அத்தனை பேருமே ‘எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு பில்’ என்று கூக்குரல் போடுவது காதில் விழவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மின் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட மின் அளவை கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை கணக்கிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வசூல் செய்யப்படுகிறது. இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக அரசு மீது அவப்பழியை செந்தில்பாலாஜி சுமத்துகிறார். அவருக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.