மொத்தத்தில் திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, திமுக இந்த தேர்தலில் வீழ்வது உறுதி, கோவையில் குண்டர்களை வைத்து திமுக அடாவடித்தனம் செய்து வருகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கொள்ளையடித்த 500 கோடி, ஆட்சி தொடங்கியது முதல் கொள்ளையடித்த என 1000- கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிஉ செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைக்கு தேர்தல் அமைதியாக முறையில் நடந்து வருகிறது, ஆனால் மதியம் 2 மணிக்கு மேல் திமுக தன்னுடைய வேலையை காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. ஒட்டுமொத்தத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் அமைதியாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு நிலைய முகவர்கள் திமுகவினரால் மிரட்டப்படுகிறார்கள் என செய்திகள் கிடைக்கின்றன.
மொத்தத்தில் திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, திமுக இந்த தேர்தலில் வீழ்வது உறுதி, கோவையில் குண்டர்களை வைத்து திமுக அடாவடித்தனம் செய்து வருகிறது. அதிமுக இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் சில இடங்களில் குண்டர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் கோவையில் ஒன்றுமே நடக்கவில்லை, துணை ராணுவம் வருமளவிற்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என முதல்வர் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கடந்த 9 மாதங்களாக திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்கள் இன்று வாக்குகளாக வெளிப்படும்.

திமுக அனைத்து இடங்களிலும் பரிசுப்பொருட்கள், பண வினியோகத்தை அமோகமாக நடத்தியிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி, ஆட்சி தொடங்கியது முதல் இதுவரை 9 மாதங்களில் கொள்ளையடித்த 1000 கோடி என அனைத்துமே தேர்தலுக்காக திமுக செலவு செய்திருக்கிறது. மொத்தத்தில் அதிமுகவுக்கு பணத்தின் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் இந்த முறை அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
