தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் எனத்தெரிவித்திருந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்,  ‘பாஜக மீதான பொய்ப் பிரசாரமே, அதிமுக தோல்விக்கு காரணம்’ என விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த வாக்களார்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே அதிமுக தோல்விக்குக் காரணம். பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிமுகவுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. விழுப்புரத்தில் மட்டும் 1.40 லட்சம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம் அதுகுறித்து விளக்கம் அளித்தார். “தேர்தல் தோல்வியை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். பாஜக அரசு தமிழக விரோத திட்டங்களை செயல்படுத்தியது போன்று திமுக உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இரண்டு ஆண்டுகாளக செய்தியைப் பரப்பி வந்தன. அந்தக் குற்றச்சாட்டை பாஜக சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை. நாடு முழுவதும் பிரதமர் மோடி தலைமைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 
தமிழகத்தில் மேற்கொண்ட பொய்ப் பிரசாரத்தால் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டது. அது அதிமுகவையும் சேர்த்து பாதித்தது. அதனால்தான் எங்கள் கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது. சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக நாங்கள் இழக்க அது ஒரு முக்கிய காரணம். அதிமுக ஆட்சி எப்போதுமே சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும். திமுகவைபோல இரட்டை வேடம் போடும் இயக்கம் அல்ல அதிமுக” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் திடீரென்று எழுந்துள்ள ஒற்றைத் தலைமை குறித்து விவாதங்களுக்கும் சி.வி.சண்முகம் பதில் அளித்தார். “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் அம்மாவின் ஆட்சியைத் தொடரவும் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட்டு வருகிறார்கள். தனக்கு பிறகு அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்று எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதிமுக சங்கர மடமும் இல்லை; திமுகவும் இல்லை. இக்கட்சி தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கம்.”என்று தெரிவித்தார்.