கஜா  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு வந்தார். பின்னர்  கார் மூலம் வேதாரண்யம் வரும் வழியில் அகஸ்தியம்பள்ளியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக சார்பில் அரிசி, பிஸ்கட் பாக்கெட்டுகள், போர்வை, கொசுவர்த்தி, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புறத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்க மத்திய அரசு மூலம் தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ராணுவ உதவி எதுவும் கேட்கவில்லை என தெரிவித்தார். அவர்கள் ஏன் கேட்கவில்லை எனவும் தமக்கு தெரியாது என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

ராணுவ வழக்கப்படி பேரிடர் காலங்களில் ராணுவ உதவி தேவை என்பதை மாந்ல அரசுகள் தான் கேட்க வேண்டும் என்றும், இப்போது கேட்டாலும் நாங்கள் உதவி செய்ய தயபராக இருப்பதாக நிர்மலா தெரிவித்தார்