கடந்த ஆண்டு, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 99 லட்சம் ரேஷன் கார்டுகள்  உள்ளன. அதில், 1 கோடியே 87 லட்சம்  அரிசி கார்டுகள்; 11 லட்சம் சர்க்கரை கார்டுகள். எஞ்சிய கார்டுகள், எந்த பொருட்களும் தரப்படாத, 'என்' கார்டுகள் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை பொங்கலுக்கு,தமிழக அரசு, அரிசி கார்டுகளுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்கியது. ஆனால் அடுத்த ஆண்டு, 20 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தலும், நாடாளுமன்றத்  தேர்தலும் நடக்க உள்ளது. இதையடுத்து, வரும் பொங்கலுக்கு, சர்க்கரை கார்டுதாரர்களின் ஓட்டுக்களை கவர, அவர்களுக்கும், பொங்கல் பரிசை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள, இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

இவை பொங்கலுக்கு முன்னரே, ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் திருநாளை, பாரம்பரிய முறைப்படி, சீரோடும், சிறப்போடும் கொண்டாட முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த, 2016 பொங்கல் பரிசு தொகுப்புடன், 100 ரூபாய் ரொக்கம், ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அதன்பின், பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது. வரும் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ள, பொங்கல் தொகுப்பிலும், ரொக்கம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தத்ககது..