பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விதிக்கப்படும் கெடுபிடிகளுக்கு இணையாக அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஆடை விஷயத்தில் தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும்போது கண்டிப்பாக துப்பட்டா போட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் எந்த மாதிரியான ஆடைகள் அணிந்து வர வேண்டும் என்று சில விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதற்கான அரசு உத்தரவும் உள்ளது. ஆனால்,  சமீபகாலமாக அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் நாகரீக உடை என்ற பெயரில் சில ஆடைகளை அணிந்து வருகிறார்கள்.

இது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, சில நேரங்களில் தேவையில்லாத பிரச்னைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஆடை விஷயத்தில் சில திருத்தங்களை செய்து புதிய உத்தரவு ஒன்றை நேற்று  பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:  அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். முக்கியமாக பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால் சுடிதார் மற்றும்  சல்வார்கமிஸ் அணிந்து வரும்போது கண்டிப்பாக துப்பட்டா போட்டிருக்க வேண்டும்.அதேபோன்று, ஆண்கள் சாதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும். சாதாரண உடையில் டீ-சர்ட்டுடன் வருவதை தவிர்க்க வேண்டும். 

அரசு  ஊழியர்கள் நீதிமன்ற விசாரணைக்காக செல்லும்போது ஆண் அரசு உயர் அதிகாரிகள் கோட், டை அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் அணிந்து செல்லலாம். அப்போதும், கண்டிப்பாக துப்பட்டா போட்டிருக்க  வேண்டும். சாதாரண நிறத்திலும் ஆண்கள் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழக முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த திடீர் கெடுபிடிக்கு அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வலைதளங்களிலும் இந்த ஆடை விவகாரம் குறித்த விவாதங்கள் எழத்துவங்கியுள்ளன.