சுபஸ்ரீ மரணத்தை அடுத்து பேனர் வைக்க உயர் நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துவரும் நிலையில், பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை பள்ளிகரணையில் கடந்த மாதம் 12 அன்று அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சாலையில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகம்  தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தது. இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், பேனர் வைக்க கடும் உத்தரவுகளைப் பிறப்பித்து அதிரடி காட்டியது.


இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். வெளிநாட்டு தலைவரும் இந்திய பிரதமரும் இங்கே வந்து சந்தித்து பேச இருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இரு தலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் முழுவீச்சில்  தயாராகிவருகிறது.
இரு தலைவர்களின் மிகப் பெரிய நிகழ்வாக கருதப்படுவதால், இரு தலைவர்களையும் வரவேற்பு கொடுத்து அசத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பகுதியாக  சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

 
இந்த மனு அக்டோபர் 3 அன்று விசாரிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.