வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாகப் புகார் செய்யப்பட்டால் அது அடுத்த 30 நிமிடங்களில் சரி செய்யப்படுவதாகவும் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடைபெற்றுவருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.  

“11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 22.89 சதவீதம், தென் சென்னையில் 23.87 சதவீதம், வட சென்னையில் 23.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

வாக்குப்பதிவு தொடங்கியபோது கோளாறு ஏற்பட்டதால் 305 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அரைமணிநேரத்தில் மாற்றப்படும். பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம்” என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.