இரண்டாவது கட்டமாக மீண்டும் 1000 ரூபாய் மற்றும் இலவச நிவாரண உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக முதல்வர் பரிசீலித்துவருகிறார் என்று தமிழக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 அன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு ரேசன் கடைகளின் மூலம் 1000 ரூபாய் ரொக்கமும், இலவச அரிசியோடு சேர்த்து துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது மே மாதம் 3-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், லாக்டவுன் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படும் நிலையிலும் மே மாத உணவுப் பொருட்களை ரேஷனில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


இந்நிலையில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் 1000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிசீலித்துவருவதாக தமிழக அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது.


தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதேபோல அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பாதிக்காமல் இருக்க ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாயும் நிவாரண உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக மீண்டும் 1000 ரூபாய் மற்றும் இலவச நிவாரண உணவுப் பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக முதல்வர் பரிசீலித்துவருகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். மேலும் 500 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்துக்கான பணிகளும் முழுவீச்சில்  நடைபெறுகின்றன.” என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.