தமிழக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தலைவர்கள் டெல்லியில் பிரசாரத்துக்கு சென்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தரப்பிலிருந்து தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள வர வேண்டாம் என்று அதிமுக தலைமை சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பாஜக சார்பில் உள்ளூர் பிரமுகர்களை வைத்து பிரசாரக் குழுவை தமிழிசை வெளியிட்டிருந்தார். தமிழிசை, எச்.ராஜா ஆகியோரை தவிர்த்து  இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது.
ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் பெரும்பாலானோர் வட இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காகக் கிளம்பி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இவர்கள் பிரசாரம் செய்துவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்.ராதாகிருஷ்ணன், கறுப்பு முருகானந்தம் ஆகியோர் ஒரு குழுவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள். டெல்லி பிரசாரத்தை முடித்துகொண்டு அவர்கள் அனைவரும் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பிறகு இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள மீண்டும் டெல்லிக்கு வர உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


வட இந்தியாவிலேயே பிரசாரம் மேற்கொண்டிருப்பதால், தமிழக பாஜக தலைவர்கள் இங்கே நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஆகியோர் சூலூரிலும் பொன்.ராதாகிருஷ்ணன் ஒட்டப்பிடாரத்திலும் பிரசாரம் மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தத் தலைவருமே பிரசாரக் களத்தில் இறங்கவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.