திமுக ஆதாரம் தர மறுத்தாலும் பஞ்சமி நிலம், மிசா பிரச்னை முடியப்போவதில்லை என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.


‘அசுரன்’ படம் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை பாராட்டி மு.க. ஸ்டாலின்  ட்வீட்டரில் பதிவிட்டார். பஞ்சமி நிலம் தொடர்பான அந்தப் படம் பாடம் என்று அதில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என்று பதில் அளித்து பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தைத் தொடங்கிவிட்டார். பின்னர் இந்த விவகாரத்தைப் பிடித்துகொண்ட தமிழக பாஜக, அதுதொடர்பாக தொடர்ந்து பேசியும் திமுகவை விமர்சித்தும் வருகிறது. முரசொலி அமைந்துள்ள நிலத்தின் மூலப்பத்திரத்தைக் காட்டுமாறு பாஜக கூறிவருகிறது.


இதேபோல மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் பேசியது சர்ச்சையானது. மு.க. ஸ்டாலின் மிசாவில்தான் கைதானார் என்பதற்கும் ஆதாரத்தை வழங்குங்கள் பாஜக பேசிவருகிறது. பஞ்சமி நில விவகாரத்தில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேசிய எஸ்.சி. ஆணையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பான விசாரணையும் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விசாரணையில், ஆதாரம் எதையும் திமுக வழங்கவில்லை என்று பாஜக கூறியது. இந்த விவகாரத்தை விசாரிக்க தேசிய எஸ்.சி. ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்று திமுக கூறியது. திமுக ஆதாரம் வழங்காததால், முரசொலி ஓனர் எங்கே? என்று தமிழக பாஜக ஹாஷ்டேக் போட்டு அதை டிரெண்ட் ஆக்கியது.


இந்த விவகாரம் இன்னும் தீராத நிலையில் இன்று அதிகாலை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில்  தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், “ பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்ட தென்று நினைக்குமாம்" அதேபோல அறிவாலயம் (@arivalayam) ஆதாரம் தரமறுத்தாலும் "பஞ்சமி நிலம்" , "மிசா" பிரச்சனை முடியப்போவதில்லை.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பேசும் வீடியோ ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது. வீடியோவில், பூனை கண்ணை மூடிக்கொண்டால்... என்ற பழமொழியை மு.க. ஸ்டாலின் உளறி கூறுவதைப் போட்டு தமிழக பாஜக அவரை கிண்டல் அடித்திருக்கிறது.