tirumavalavan talks about bjp president candidate

ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் சிந்தனையுள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தி சதி வேலை செய்வதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

பாஜக தரப்பில் ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதைதொடர்ந்து பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதையடுத்து ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரை பூர்வீகமாக கொண்டவர்.

உத்தரபிரதேசத்தில் இருந்து 1994-2000 மற்றும், 2000-2006 வருடங்களில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர் ராம் நாத் கோவிந்த். 2015 அக்டோபர் 8ம் தேதி முதல், பீகார் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அடுத்த பத்தாண்டுகள் தலித் மக்களை நோக்கி ஆட்சி நகரும் என மோடி வாக்குறுதி கொடுத்ததை நம்பி பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

ஆனால் தற்போது பாஜகவால் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ஒரு தலித் என்பதால் மகிழ்ச்சி அடைய முடியாது.

காரணம், காங்கிரஸால் நிறுத்தப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த நாராயணன் மதசார்பற்ற கொள்கையில் ஈடுபட்டிருந்தவர். தற்போது பாஜகவால் அறிவிக்கபட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த் ஒரு ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்.

இருவரையும் ஒன்றாக ஒப்பிட முடியாது. ராம்நாத் கோவிந்த்தை பகடைகாயாய் வைத்து சதிவேலை செய்ய பாஜக திட்டமிடுகிறது.

எனவே எதிர்கட்சிகள் மதசார்பற்ற தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்