திருச்சி அருகே துறையூரை அடுத்த எஸ்.எஸ் பூதூரில் மினி வேன் ஒன்றில் 22  பேர் பயணம் செய்தனர்.  கறி விருந்து மற்றும் கோயில் திருவிழாவிற்கு சென்ற போது  அவர்கள் பயணம் செய்த  மினி வேனின் டயர்  திடீரென வெடித்தது. இதையடுத்து கடுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி அருகில் உள்ள தண்ணீர் இல்லாத 100 அடி ஆழ கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கியவர்கள் படுகாயம் அடைந்து அபாய குரல் எழுப்பினர்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதோடு. காவல்துறையினருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 22 பேரில்  3 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டோர்  திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரின் உடல் நிலை மோசமாக இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.