தமிழகத்தை 70 ஆண்டுகளாக குட்டிச் சுவராக்கிய திராவிடம் தற்போது அழிந்து வருவதாகவும், ஆன்மீகம் வேகமாக வளர்ந்து வருகிறது என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். 

மதுரையில் துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி சசிகலா ஆட்சி அமைக்கவுள்ளார் என கேள்விப்பட்டு உடனடியாக துக்ளக்கின் பொறுப்பை ஏற்க முன்வந்ததாக தெரிவித்தார். துக்ளக் விற்பனை அதிகரிக்க சோவுக்கு கருணாநிதி காரணமாக இருந்ததுபோல, தனக்கு சசிகலாதான் விற்பனைப் பிரிவு மேலாளர் என்றும் குருமூர்த்தி கூறினார். 

திராவிட அரசியலை தமிழக மக்கள் புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். திராவிடம் மறைந்து ஆன்மீகமாக மாறிகொண்டு இருக்கிறது எனவும் கூறினார்.  தமிழகத்தை மாற்றிய பெருமை எம்ஜிஆருக்கு ஒருவருக்கு மட்டுமே உண்டு. அவர்தான் கோயிலுக்கு செல்கிறேன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றதாக பாராட்டு தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தை 70 ஆண்டுகளாக பாழ்படுத்தியது திமுக, அதிமுக ஆகிய கழகங்கள் தான். திராவிட கலாச்சாரத்தை தமிழகம் அறவே ஒதுக்கிவிட்டது. தமிழக மக்களை போல நல்லவர்கள் இல்லை என்பது இந்திய அளவிலான எனது கணிப்பு. தேசிய அரசியலில் தலைமைத் தாங்கும் அளவுக்கு தமிழகத்தின் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.