வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதில், தமிழகத்தில் அடுத்து அமையுள்ள ஆட்சி திமுக ஆட்சிதான் என்பதை கூறிக்கொள்கிறேன். நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும். நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும். உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்தினால்தான் முழுமையான வெற்றி பெறமுடியும். நாம்தான் வெல்லப் போகிறோம். ஆனால், அந்த வெற்றியை எளிதாக பெறவிட மாட்டார்கள். 

ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர் என மனதில் வைத்து கொள்ளுங்கள். தனிநபர்கள் வெற்றிபெற வேண்டும் என நினைக்காதீர்கள் திமுக வெற்றி பெற வேண்டும் என நினைக்கவேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 முறை வெற்றி பெற்றதற்கு சமம். பாஜக ஆட்சியின் அதிகார பலம், அதிமுக ஆட்சியின் பண பலத்தை தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும். நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். 

117 இடங்களில் நாம் வென்றால் போதும், ஆனால், அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. 1971 மற்றும் 1996 தேர்தல்களில் வென்றதை போன்ற வெற்றியை நாம் பெற வேண்டும். 2004, 2019 மக்களவைத் தேர்தலில் வென்றதை போன்ற வெற்றியை சாத்தியப்படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.