ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவர், தமிழக சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இது போதாது என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் எடப்பாடி அணிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்களுடன் தனிக் கூட்டம் நடத்தி வந்தார். 

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

டிடிவி தினகரன், ஜாமினில் வெளிவந்த நிலையில், அவருக்கு ஆதரவாக தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற அவைக்குழு உறுப்பினர் பொறுப்பை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்துள்ளார். இவரின் ராஜினாமாவால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.