thoppu venkatachalam complaint against senkottaiyan
ஜெயலலிதா உயிருடன் இருக்கு வரை, அவர் அதிமுகவின் ஒரே தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பின்னர், ஒவ்வொரு பகுதியிலும் பலர் தலைவராக முயற்சித்து கொண்டிருக்கின்றனர்.
அதற்கு எதுவாக, தமது பகுதியில் செல்வாக்கோடு திகழும் அமைச்சர்களுக்கு எதிராக வெளிப்படையான கருத்துக்களையும் பலர் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், செங்கோட்டையனுக்கு எதிராக தொடர்ந்தது கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் தோப்பு வெங்கடாச்சலம், அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று, அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த தோப்பு, செங்கோட்டையனுக்கு எதிராக வளர்க்கப்பட்டார். ஆனால், அவரது செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தோப்புக்கு, அதில் ஏமாற்றமே மிஞ்சியது. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த போதும், அவரால் அமைச்சர் பதவியில் அமர முடியவில்லை.

அதனால், ஈரோடு பகுதியில் மீண்டும் தமது செல்வாக்கை நிலைநாட்டியுள்ள செங்கோட்டையனுக்கு எதிராக அவர் தற்போது கம்பு சுற்ற ஆரம்பித்து விட்டார்.
நேற்றைய சட்டசபை விவாதத்தின் போது, நீங்கள் எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று? செங்கோட்டையனிடம் ஒரு கேள்வியை கேட்டார் ஸ்டாலின். அதற்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது.
இதை வசமாக பிடித்து கொண்ட தோப்பு, பெருந்துறையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அதை அப்படியே வெளிப்படையாக போட்டு உடைத்தார். அது பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது.

சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி பிடித்து தனி அணியாக செயல்பட தொடங்கியபோது, அவர் எதிர் கட்சி தலைவரான ஸ்டாலினை பார்த்து சிரித்தார். அதனால் அவர் துரோகி என்றெல்லாம் சசிகலா தரப்பினர் அவர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
ஆனால், சட்டசபையிலேயே…நீங்கள் எத்தனை முறை பேசினீர்கள்? என்று செங்கோட்டையனை பார்த்து ஸ்டாலின் கேட்டார். அதற்கு செங்கோட்டையன் சொன்ன பதில், அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அமைச்சர் ஒருவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்தே நீக்கப்படும் அளவுக்கு அவர், ஸ்டாலினோடு தொடர்ந்து பேசி இருக்கிறார் என்று தோப்பு வெங்கடாச்சலம், அதை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

இது சாதாரண விஷயம் என்றாலும் கூட, அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியும், தமக்கு எதிரான செங்கோட்டையன் தற்போது அமைச்சராக இருப்பதும், தோப்பு வெங்கடாச்சலத்தை இந்த அளவுக்கு பேச வைத்துள்ளது என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால்..இப்படி ஒரு நிகழ்வு நடக்குமா? என்றும் அதிமுகவினர் ஆதங்கப்படுகின்றனர்.
