தமிழக அரசு மக்கள் நம்பிக்கையை பெறவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்  தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவும் என பெருந்துறை தொகுதி சசிகலா தரப்பு எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் என இரண்டாக விரிந்தது.

இது தொடர்பாக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சசிகலா சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த 122 எம்எல்ஏக்களில் 5 பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழ்ந்துவிடும் நிலை உள்ளது.

இந்நிலையில் சசிகலா தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கல்குவாரி மற்றும் மதுக்கடை பிரச்சனைகளில் அணி மாறி விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

இதே போன்று திருப்பூர் எம்எல்ஏ குணசேகரன், அதிகாரிகள் எம்எல்ஏக்களை மதிப்பதில்லை என்றும், தாங்கள் சொல்லும் பணிகள் எதையும் செய்வதில்லை எனக்கூறி நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், மக்கள் நம்பிக்கையை வெறும் வகையில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தற்போது பொது மக்களை தொகுதிக்குச் சென்று சந்திக்க முடியாத நிலை இருப்பதாவும், தமிழக அரசு மக்கள் நம்பிக்கையை பெறவில்லை ன்பதால் தான் இந்த நிலை உருவாகியுள்ளதாவும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஆட்சிமுறையில் மாற்றம் வேண்டும் எனவும் அவர் கூறினார்.