Thoppu Venkadajalam join with Senthil balaji against Edapadi K palanisami

அதிகாரத்தில் இருந்து ஆட்டி படைத்தவர்கள், தமக்கான முக்கியத்துவத்தை இழக்கும்போது, அதை மீண்டும் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்து விடுவார்கள்.

அந்த வகையில், செல்வாக்கு மிக்க நிலையில் இருந்து செல்லாக்காசாகி போன தோப்பு வெங்கடாச்சலமும், கரூர் செந்தில் பாலாஜியும், எடப்பாடிக்கு வேட்டு வைப்பதற்காக கைகோர்த்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், முதல்வர் பொறுப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில், பன்னீருடன், தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் செந்தில் பாலாஜியும் இருந்தனர்.

அந்த அளவுக்கு கடந்த ஜெயலலிதா ஆட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருவரும் திகழ்நதனர். 

ஆனால், அதன் பின்னர், ஒரே நாளில், அமைச்சர் மற்றும் கட்சி பதவியையும் பறித்து செந்தில் பாலாஜியை தூக்கி கடாசினார் ஜெயலலிதா.

அதேபோல், கடந்த தேர்தலில், எழுந்த பல்வேறு குற்றசாட்டுகள் காரணமாக, தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் அமைச்சர் பதவி வழங்காமல் ஓரம் கட்டினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா தமக்கு அமைச்சர் பதவி கொடுப்பார் என்று, இருவருமே காத்திருந்து ஏமார்ந்து போயினர்.

இருவரும் செல்வாக்குடன் வலம் வந்த மாவட்டங்களில், தற்போது, கட்சிக்காரர்கள் கூட சரியாக மதிப்பதில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தவர்கள், எடப்பாடியாவது எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், அவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுத்து போன இருவரும், தங்களுடைய பண பலத்தை பயன்படுத்தி, கொங்கு மண்டலம் உள்பட தமிழகம் முழுவதும் 14 எம்.எல்.ஏ க்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.

மேலும், தொகுதி பிரச்சினை, மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை காரணம் காட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு, போராட்டம் என இருவருமே, எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர்.

கடைசியாக, ஈரோடு கல்லூரி நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்து கொண்ட போது கூட, அதில் பங்கேற்காமல் தோப்பு வெங்கடாச்சலம் புறக்கணித்தார்.

இதுவரை, தூவானம் போல லேசான மிரட்டல் மட்டுமே விட்டு வந்த இருவரும், இனி 14 எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன் இடி முழக்கமாக எடப்பாடியை அச்சுறுத்த தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, பல கோஷ்டிகளுக்கு மத்தியில் சிக்கி மூச்சு திணறும் முதல்வர் எடப்பாடிக்கு, தமது சொந்த சமூகத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் மூலம் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை, முதல்வர் எடப்பாடி எப்படி சமாளிக்க போகிறார்? என்றே கொங்கு மண்டல அதிமுகவினர் கவலை தெரிவிக்கின்றனர்.