மகன் ரவீந்திரநாத்-க்காக கடும் பிரசாரத்தில் இருந்தாலும் கூட, கழக ஒருங்கிணைப்பாளர்! துணை முதல்வர்! எனும் முறையில் ஓ.பன்னீர்செல்வம் மாநிலம் முழுக்க தன் கட்சி மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான பிரசாரங்களில் ஈடுபட்டுதான் வருகிறார். 

இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர் இரண்டு முறை திட்டமிட்டு பின் ரத்தானது. இதனால் ‘ஓ.பி.எஸ்.ஸுக்கும், தமிழிசைக்கும் இடையில் லடாய். அதான் அவரு வர்றதை கேன்சல் பண்ணிட்டார்.’ என்று கிளப்பிவிட்டது ஒரு கோஷ்டி. இது பன்னீரின் காதுகளுக்குப் போக, பதறியவர் ‘இதோ வந்துட்டம்பே!’ என்று சமீபத்தில் ஓடோடி வந்தார். 

ஆனாலும் தமிழிசைக்கு ஏதோ ஒரு மனத்தாங்கல் என்றுதான் தகவல். ஆக மொத்தத்தில் முழு மனசோடு அந்த பிரசாரம் துவங்கவில்லையாம். பஞ்சாயத்தின் நடுவில் உருவான நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ பன்னீரின் வார்த்தைகளில் ஏக தடுமாற்றங்கள். தூத்துக்குடியின் மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்களை மாற்றிப் பேசி கட்சியினரை அதிர வைத்தார். ‘கழக ஒருங்கிணைப்பாளரே இப்படி கட்சியின் கட்டமைப்பை குழப்பி பேசுறதா?’ என்று காண்டானார்கள் கட்சியினர். ஒருவழியாய் சமாளித்து பன்னீர் பேசிக் கொண்டிருக்கையில், பார்வையாளர் சைடிலிருந்து ஒருவர் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து சவுண்டு விட்டுக் கொண்டே இருந்தார். 

‘இங்ஙன தூத்துக்குடியில துப்பாக்கி சூடுல பதிமூணு பேர் இறந்தாகளே! அதையும் பத்தி பேசுங்கண்ணே.’ என்று அவர் சவுண்டு கொடுக்க, துணைமுதல்வரின் முகம் இறுகிவிட்டது. ஆனாலும் சமாளித்தபடியே ‘எப்பா கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்பதானே நான் பேசுறது மத்தவங்களுக்கும் கேட்கும்?’ என்று சற்றே ஆதங்கத்துடன் பேச, போலீஸுக்கு புரிந்துவிட்டது. அப்படியே கூட்டத்தினுள் நுழைந்து, அந்த நபரை அப்புறப்படுத்த முயன்றனர்.

 

ஆனாலும் வர மறுத்த அந்த மனிதர், வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுகையில் ”குருவி கணக்கா மனுஷ மக்கள சுட்டுக் கொன்னீகளே! அதை கேட்டா தப்பாய்யா? அப்புறம் என்னாய்யா சனநாயகம். துணைமுதல்வர்னா மக்க நாங்க பயந்துடணுமாய்யா? பேசக்கூடாதா?” என்று கடும் குரல் கிளப்பிவிட்டார். பெரும் சலசலப்பாகிவிட்டது. பன்னீருக்கு நிலை கொள்ளவில்லை. அதேவேளையில் அருகிலிருந்த வேட்பாளர் தமிழிசைக்கும், துப்பாக்கிச் சூடு விவகாரம் எந்தளவுக்கு மக்களை பாதித்துள்ளது, அது எவ்வளவு பெரிய அரசியல் செய்யப்போகிறது என்பது தெளிவாய் தெரிந்தது. புரிஞ்சா சரி.