பஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத டாக்டர் ராமதாஸ், ‘அசுரன்’ படம்  வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார்.
’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்டும் அதற்கு முரசொலி நிலம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் போட்ட ட்வீட்டும், திமுக - பாமகவை வார்த்தைப் போருக்கு அழைத்துசென்றுவிட்டது. முரசொலி நிலம் தாண்டி அண்ணா அறிவாலயத்தையும் திமுகவின் சொத்துகள் பற்றியும் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன. இதற்கெல்லாம் திமுகவும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்நிலையில் பஞ்சமி நிலம் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கும் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுகொல்லப்பட்ட ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருடைய நினைவு தூண் திறப்பு விழா மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.  “பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று இரண்டு முறை நடத்திய மாநாட்டில் முதல்வராக கருணாநிதி பங்கேற்றார். தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து, அதை மீட்க ஆணையம்  அமைக்கவேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டேம்.  அதன்படி திமுக ஆட்சியில் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த ஆணையத்தையே செயலிழக்க செய்தார்.
இப்போது அரசியல் காரணங்களுக்காக பஞ்சமி நிலம் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட்டரில் பேசுகிறார். அதற்கு காரணம் ‘அசுரன்’ திரைப்படம். அந்தப் படத்தை நானும் பார்த்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் படத்தைப் பார்த்தார். நான் அந்தப் படம் குறித்து ட்விட்டர்  பக்கத்தில்  எழுதவில்லை. திமுக தலைவர் பாராட்டி எழுதியிருந்தார். அதை ராமதாஸால் பொறுத்து கொள்ள முடியவில்லை. உடனே முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம் என திமுகவை சீண்டி வம்புக்கு இழுக்கிறார்.

 
அதற்கு பதில் அளித்த திமுக தலைவர், முரசொலி இருக்கும் கட்டிடம் பட்டா நிலம் யாரிடம் வாங்கினோம் என்று எங்களிடம் ஆவணம் இருக்கிறது. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், அரசியலிலிருந்து விலக தயார். அப்படி நிரூபிக்காவிட்டால்  அரசியலில் இருந்து விலக தயாரா என ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு ராமதாஸ், இதுவரை வாயே திறக்கவில்லை. பஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத ராமதாஸ், ‘அசுரன்’ படம்  வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார். திமுக எதிர் சவால் விட்டதும் வாயே திறக்கவில்லை.  திமுக ஆட்சில் அதுதொடர்பாக ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டது” என்று தொல். திருமாவளவன் பேசினார்.