விரைவில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கொண்டுவருவார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
அமெரிக்கா சென்றிருந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
பகவத் கீதையை அண்ணா பல்கலைக்கழகப் பாடத்தில் இணைத்திருப்பது அவர்களின் நீண்டநாள் கனவுத் திட்டம். விரைவில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கொண்டுவருவார்கள். பாஜக விரும்பியதையெல்லாம் அதிமுக அரசு செய்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்தப் பாடத்திட்டம். வேறு எந்த மாநிலத்திலும் அவர்கள்  முனைப்பு காட்டுவதில்லை. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என ஒவ்வொன்றையும் தமிழகத்தில் முதலில் செயல்படுத்துவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.


இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறதா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி திரும்பவும் எழுகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் கண்டனத்துக்குரியது. ரயில்வேயை தனியார் மயமாக்கல் செய்வதைத எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு சதித்திட்டம் . இது மெல்ல சமூக நீதியைக் குலைக்கும் செயல் .ரயில்வே தனியார்மயமாதலை அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து முறியடிக்க வேண்டும்.


நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட செயலுக்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆள்மாறாட்ட செயல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை அரசு முறையாகக் கவனிக்கவேண்டும். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் அறிவிக்க வேண்டும். இத்தனை காலமாக தேர்தலை தள்ளி வைத்தது சட்டத்துக்கு எதிரானது. தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.