இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்தில் நாம் நடத்திய 4 கட்ட போராட்டங்களுமே ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில்தான் இருந்தன. குறிப்பாக கடந்த 30ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் நடத்தப்பட்ட போராட்டங்களும், அதற்கு முன் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் நடத்திய இரு சக்கர ஊர்தி எழுச்சிப் பேரணிகளும் நமது வலிமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளன. இத்தகைய போராட்டத்தை நம்மைத் தவிர வேறு யாரும் நடத்த முடியாது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு போராட்டத்திலும் பாட்டாளி சொந்தங்கள் தங்களின் குடும்பங்களுடன் கலந்து கொண்டதையும், பள்ளிக்குழந்தைகளும், பாட்டி - தாத்தாக்களும் கூட பேரணியில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியதையும் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன்.
ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் கூட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. வன்னியர்களின் வாழ்க்கை நிலை 400 ஆண்டுகளாக மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும், நமக்கு சமூகநீதி வழங்க ஆட்சியாளர்களுக்கு இன்னும் மனது வரவில்லை. உலக வரலாற்றை உற்று கவனித்தால் ஓர் உண்மை புரியும். எந்த உரிமையும் எளிதில் கிடைத்துவிடவில்லை. மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகுதான் எல்லா உரிமைகளும் கிடைத்துள்ளன. உரிமைகள் கிடைக்கும் வரை நாம் ஓய்ந்து விடப் போவதில்லை. இந்த உண்மை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும். அதனால், நமக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் வரை நாம் நமது போராட்டத்தை இன்னும் வலிமையுடன் தொடருவோம்.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோருவதற்கு எல்லா நியாயங்களும் உள்ளன. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் வன்னியர்களின் விகிதம் 25 விழுக்காட்டுக்கும் அதிகமாகும். ஆனால், அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் 7 விழுக்காட்டைக்கூட தாண்டவில்லை. நமது மக்கள்தொகை விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவக் கல்வியில் நமது பிரதிநிதித்துவம் இன்னும் மோசம். 5 விழுக்காட்டைக் கூடத் தாண்டவில்லை. அதே நேரத்தில் சில சமூகங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களின் மக்கள்தொகை விகிதத்தை விட 4 மடங்கு பங்கை அனுபவிக்கின்றனர்.
கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த விவரங்களை வெளியிடுங்கள். உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ளட்டும் என்று கேட்டால் அந்த விவரத்தை வெளியிடுவதற்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தயாராக இல்லை. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் செய்த சமூக அநீதியை மூடி மறைப்பதற்காக எங்கள் வன்னியர் சமுதாயம் இன்னும் அநீதிகளைத் தாங்கி அடித்தட்டிலேயே கிடக்க வேண்டுமா? என்ற புரட்சிக்குரல் நமது மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு நியாயமான விடை அளிக்கப்பட வேண்டும்.
அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நமது போராட்டம் நமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம்தானே தவிர, எந்த சமூகத்திற்கும் எதிரான போராட்டம் அல்ல. இன்னும் கேட்டால் அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வன்னியர் சங்கம் தொடங்கிய நாளிலேயே தீர்மானம் இயற்றி வலியுறுத்தினோம். அதன்பிறகும் 40 ஆண்டுகளாக நாம் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாம் இதுவரை நடத்தியப் போராட்டங்கள் எத்தகைய வெற்றிகளைப் பெற்றனவோ, அதை விட கூடுதலான வெற்றிகளை வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் குவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே பாட்டாளி சொந்தங்கள் செய்ய வேண்டும். நமது உரிமைகளுக்காக நாம் போராடுவது மட்டுமின்றி, அனைத்து சமூக மக்களையும் திரட்டி மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் முன் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கச் செய்ய வேண்டும். நகர்ப்புறங்களிலும் நமது வலிமையை இந்தப் போராட்டம் நிரூபிக்க வேண்டும். அதன்மூலம் பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாவதை உறுதி செய்ய வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.