தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக முதல்வர் செயல்பட்டதாக எம்.எல்.ஏ கருணாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் மட்டும் சட்டமன்ற கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் தொடங்கிய கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த சட்டசபை, மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்றும், இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் பேசிய நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து புகழ்ந்து பேசினார்.

அப்போது அவர் “அரியர் மாணவர்களின் அரசன் என முதல்வர் பழனிசாமி புகழப்படுகிறார். 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்து இதுவரை எந்த சாமியும் செய்யாததை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.