கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நிச்சயம் முயற்சிக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. 

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நிச்சயம் முயற்சிக்காது எனவும் அப்படியே ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையில் அமைத்தால் கூட ஒரு பெயரளவிற்கு மட்டுமே செயல்படுத்தப்படுமே தவிர பிரச்சனைக்கு தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார். 

நிச்சயம் அதிக அதிகாரம் கொண்ட ஒரு மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை என குற்றம் சாட்டினார். 

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் வரும் ஏப்ரல் 1 முதல் 4 வரை பிரச்சார இயக்கமும், 5-ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என தெரிவித்தார். 
மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களை மாநில அரசின் தலையில் சுமத்துவதாகவும் இத்தகைய மத்தியஅரசின் செயலை கண்டிக்கும் ஒரு வார்த்தை கூட பட்ஜெட் உரையில் இல்லை எனவும் சாடினார்.