பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். 

காதலித்து ஏமாற்றியதற்காக மதுரவாயல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை 21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி வாசலின் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

போலீசார் நிறுத்தியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் துரத்தி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை எட்டி உதைத்தார். அப்போது, கணவன் மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், மனைவி உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு பெண்கள் உயிரிழப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை.வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள்,ஆட்சியாளர்களே
இவ்வாறு தெரிவித்துள்ளார்.