this is the correct to prove my birth reason said kamal

தான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்க சரியான காலம் வந்துவிட்டது என கமல் தெரிவித்துள்ளார்.

கமலின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமாக செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். 

சென்னை தியாகராய நகரில் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி கமல் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அரசியலில் ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவுசெய்திருப்பதாகவும் சில ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாவதாகவும் கமல் கூறினார்.

தனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் பல அறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் என கமல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஒரு சினிமா எடுக்கவே ஆறு மாதம் தேவைப்படுகிறது. அரசியல் என்பது பெரிய பணி. எனவே, அரசியலில் கால் பதிக்க முதலில் என்னை தயார் செய்துகொண்டு பின்னர் தேர்தலில் நிற்பேன். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரத்தின் மையத்தில் மண் சேர்ந்துவிட்டது. அதனால் நகர்வதில் தடைபடுகிறது. இதுதான் நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்க சரியான காலம் என கமல் தெரிவித்தார்.