சந்தனக்காடு இயக்குநர் கவுதமனை மறக்க முடியாது. சினிமா துறையில் பா.ம.க. ஆதரவு கலைஞன் என்று பெயரெடுத்தவர். ஜல்லிக்கட்டு, நீட் என்று தமிழர்களின் உணர்வு சார்ந்த போராட்டங்களில் உணர்ச்சி பொங்க பங்கேற்றுக் கொண்டு தன்னை ஜனரஞ்சக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். 

இது போதாதென்று தனி கட்சி துவக்கப்போவதாய் அறிவிப்பை தட்டியிருப்பவர், ஆன் தி வேயில் ரஜினியை வறுவறுவென வறுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கையில் ரஜினியை வறுக்கிறார் என்று சொல்ல முடியாது. ரஜினியை காய்ச்சி எடுப்பதற்காகவே வாய்ப்புகளை உருவாக்குவதில் கவுதமன் கெட்டி. இந்த சூழ்நிலையில், ‘உங்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கும் என்னதான் பிரச்னை?’ என்று கேட்டதும், கடகடவென கண்கள் சிவந்த கவுதமன் “சினிமா துறையை சேர்ந்த ஒருவனாக ரஜினி, கமல் இருவரையும் நான் வெகுவா மதிக்கிறேன். ஆனால் ரெண்டு பேரும் அரசியலுக்கு வரும் காலம், சூழலை கவனியுங்க. 

பேரு, புகழ், சம்பாத்தியம் என அள்ளிக் கொடுத்த மக்களிடம் போயி ‘நான் நாட்டையும் ஆளணும். அதனால எனக்கு ஓட்டுப்போடுங்க.’ அப்படின்னு சொல்றது மோசமான செயல். அதுவும் 68 வயசுல ரஜினி இப்படி வந்து நிற்கிறார். இது நேர்மையான செயல் இல்லை. 

இவங்க ரெண்டு பேருக்குமே இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ளவங்களோடு அவ்வளவு நெருக்கமிருக்குது. இவங்க நினைச்சிருந்தால் போன் பண்ணியோ அல்லது நேரில் போயோ தமிழக மக்களின் பிரச்னைகளை காவிரி முதல் நீட் வரை பல பிரச்னைகளை பேசி முடிச்சிருக்கலாம். அல்லது பிரச்னையில் நமக்கு நியாயம் கிடைக்கிறதுக்கான சூழலையாவது உருவாக்கியிருக்கலாம். அதுவும் இல்லையா, தமிழனுக்கு நடக்கும் அநியாயத்தையாவது தடுத்திருக்கலாம். ஆனால் இது எதுவுமே பண்ணாமல், இப்போ வந்து ‘நான் உங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன். நான் உங்களில் ஒருவன்’ அப்படின்னு சொல்றதை எப்படி ஏத்துக்க முடியும்? 

இது மக்களை பார்த்து இரக்கம் கொள் விஷயமில்லை ஏமாற்று வேலை. இவங்களோட உள்நோக்கம் மக்களுக்கு நல்லாவே புரியுது. அதனால இவங்களை மக்கள் ஏத்துக்கமாட்டாங்க. நானும் இவர்களை  மிக கடுமையாக எதிர்க்கிறேன், மிக கடுமையா அம்பலப்படுத்துவேன்.” என்று கொதித்திருக்கிறார்.


 
தங்களுக்கு எதிராக கொதிக்கும் கவுதமனின் பின்னணியில் பா.ம.க. இருப்பதாகவே நினைக்கிறார்கள் ரஜினியும், கமலும். அதிலும் ரஜினி ரொம்பவே அப்படி சந்தேகிக்கிறார். காரணம், அவருக்கும் அக்கட்சிக்கும்தான் பல வருடங்களாக பஞ்சாயத்து நடக்கிறது அல்லவா!