இது தற்காலிக முடிவு தான்.. தேர்தல் ஆணையம் என்ன சொல்லி இருக்கு கவனிச்சீங்களா.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்.!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவுதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க;- அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்... தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தகவல்!!
இதனை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து, இபிஎஸ் தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை அறிவித்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த அதிமுக; பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவுதான். தற்போதைய முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் இபிஎஸ்க்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருத முடியாது.
ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென்றால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தரப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் தரப்பட்டுள்ளது என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.