திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

மேலும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே திருவாரூர் தொகுதி தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி அடுத்தடுத்து இடைத் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுவது போல் சம்பவங்கள் நடைபெறுவதால் தேர்தல் நடக்குமா ? என் சந்தேகம் எழுந்துள்ளது.