திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா, இல்லையா எனப் பட்டிமன்றம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி மக்கள் நீதி மய்யம் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஓரிறு நாட்களில் அறிவிக்கப்படும் என கமலஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார்.  தேர்தலில் போட்டியிடுவது பற்றி நேற்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சியின் தலைவர் கமலஹாசனிடம் வழங்கி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

20 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே கமலஹாசன் அறிவித்திருந்ததால், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட கமல் விரும்புவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருவாரூருக்கு மட்டும் தனியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இத்தேர்தலில் போட்டியிட கமல் ஆர்வம் காட்டவில்லை என்றே கமலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இது பற்றி அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சில கருத்துகளைத் தெரிவித்தார்கள். “இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற திமுக, அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் கடுமையாக முயற்சி செய்யும். இதனால் அதிகார துஷ்பிரயோகம், பணம் விநியோகம் தாராளமாக இருக்கும். இதுபோன்ற சுழலில் போட்டியிட்டு, குறைவான வாக்குகளைப் பெற்றால், அது கட்சி மீது எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றே கட்சி நினைக்கிறது. அதனால், இடைத்தேர்தல் நடந்தாலும் போட்டியிட கமல் விரும்பமாட்டார்” என்று தெரிவித்தார்கள். 

அதற்கேற்ப செயற்குழுவிலும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாகப் பேசவில்லை. அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வது மிகவும் சிரமம் என்றேஎ பேசியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் திருவாரூர் இடைத்தேர்தலில் கமல் கட்சி களம் காணாது என்பதே தற்போதைய நிலை.