திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியும் ஸ்டாலின் மறுத்துவிட்டதற்கான பின்னணியில் மோடி பார்முலா இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தி.மு.க பொருளாளர் துரைமுருகன் நேராக சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கலைஞரின் தொகுதியான திருவாரூரில் நின்று வெற்றி பெறுங்கள், கொளத்தூர் எம்.எல்.ஏ பதவியை பிறகு ராஜினாமா செய்து கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். இதனையே டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றோரும் ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளனர். 

முதலில் ஸ்டாலின் கூட திருவாரூர் தொகுதியில் களம் இறங்க ஆயத்தமாகிவிட்டார். மேலும் திருவாரூர் தொகுதியில் பூத் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை, தி.மு.க.வினரின் பூத் ஏஜென்டுகள் உள்ளிட்ட விவரங்கள் கூட உடனடியாக அண்ணா அறிவாலயம் வந்து சேர்ந்தது. திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் நேற்று முன் தினம் இரவு முழுவதும் ஸ்டாலின் தரப்பு கேட்ட விவரங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார். 

மேலும் கலைஞர் போட்டியிட்ட போது குறைவான வாக்குகள் எந்த பகுதியில் கிடைத்தது, அங்கு பூத் ஏஜென்ட் யார் உள்ளிட்ட விவரங்கள் வரை சேகரிக்கப்பட்டன. ஆனால் நேற்று திடீரென அனைத்தும் மாறிவிட்டது. போட்டியிடும் முடிவில் இருந்து திடீரென ஸ்டாலின் பின்வாங்கினார். துரைமுருகன் மற்றும் ஆ.ராசாவை அழைத்த ஸ்டாலின் திருவாரூரில் டி.ஆர்.பாலுவை போட்டியிடச் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு துரைமுருகனும், ஆ.ராசாவும் லேசாக அதிர்ச்சி அடைய அதற்கான காரணத்தையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக மோடியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறேன், இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் நான் களம் இறங்கினால் நிச்சயமாக நம்மால் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்ய முடியாது. எங்காவது ஒரு இடத்தில் இருந்து நமக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பார்கள். 

சாதாரணமான செலவுக்கு கூட பணத்தை எடுக்க முடியாமல் கெடுபிடி காட்டுவார்கள், ஆர்.கே.நகரில் நமக்கு இந்த அனுபவம் இருக்கிறது. மேலும் மோடியை கடுமையாக எதிர்க்கும் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் முயற்சி செய்வார்கள். அதுமட்டும் இல்லாமல் அழகிரியை எனக்கு எதிராக களம் இறக்கி பா.ஜ.க, அ.தி.மு.க ஆதரவு அளிக்க முடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூட தகவல் வருகிறது.

 

எனவே திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் திருவாரூர் பகுதி டி.ஆர்.பாலுவுக்கு நன்கு அறிமுகமானது. அவரது மகன் டி.ஆர்.பி ராஜா மன்னார் குடி எம்.எல்.ஏ எனவே டி.ஆர்.பாலுவை களம் இறக்குவது பற்றி யோசியுங்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் பிறகு டி.ஆர்.பாலுவிடன் இதை பற்றி பேசும் போது இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே பூண்டி கலைவாணனை அழைத்து ஸ்டாலின் விருப்ப மனு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன் அடிப்படையில் பூண்டிகலைவாணன் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுஅளித்துள்ளார். அவரே தி.மு.க சார்பில் அங்கு களம் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.