நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்க உதவுவதாக தி.மு.க கொடுத்த வாக்குறுதியை நம்பியே திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா களம் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவில் முக்கியமான நிர்வாகிகளில் ஒருவர் டி.ராஜா. அந்த கட்சியின் தேசிய செயலாளராக இருந்தவர். தற்போது மாநிலங்களவை எம்.பியாகவும் உள்ளார். ஆனால் டி.ராஜாவின் எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு அ.தி.மு.க ஆதரவில் டி.ராஜா எம்பியாகியிருந்தார். அப்போது இடதுசாரிக்கட்சிகளுக்கு சில எம்.எல்.ஏக்கள் இருந்தனர், அ.தி.மு.கவின் ஆதரவுடன் டி.ராஜா எளிதாக எம்.பியானார். 

ஆனால் தற்போது இடதுசாரிக்கட்சிகளுக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒரு எம்.பி கூட கிடையாது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே டி.ராஜா மீண்டும் ராஜ்யசபா எம்.பி ஆவது மிகவும் கடினம். இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு என டி.ராஜா தீவிரமாக களம் இறங்கினார். 

பொதுவாக இடதுசாரிக் கட்சித்தலைவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது இல்லை. தேர்தல் என்றால் எதிர்கொள்வது தான் அவர்களின் வழக்கமாகும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக டி.ராஜா திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்பதன் பின்னணியில் தி.மு.க உள்ளது. 

திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுவதை தி.மு.க தற்போது விரும்பவில்லை. அந்த தேர்தலுக்கு எதிராக தி.மு.க நீதிமன்றம் சென்றால் தமிழகத்தில் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இடைத்தேர்தலை கண்டு தி.மு.க பயப்படுவதாக விமர்சனங்கள் எழும். இதனால் தான் டி.ராஜாவை மீண்டும் எம்.பியாக்குவதாக தி.மு.க தரப்பில் இருந்து உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி, டி.ராஜாவும் திருவாரூர் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறார்.