காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தன்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திடீரென டெல்லி சென்றார்.

காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதில் இருந்து, அதிரடியாக கூட்டணி கட்சிக்கே எதிராக பேசி வருவதும், சர்ச்சைக்கு உரிய கருத்துகளை கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா விவகாரத்தில் வெள்ளை அறிக்கையும் வேண்டாம். கருப்பு அறிக்கையும் வேண்டாம் என கூறி சர்ச்சையில் சிக்கினார். அதிமுக விவகாரத்தில் கருத்து எதையும் கூறாமல், மவுனம் காத்து வருகிறார்.

அவர் பதவியேற்றது முதல், கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை நியமிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். கட்சியின் மாவட்ட தலைவர்களில் பெரும்பாலானோர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனால் நியமிக்கப்பட்டவர்கள். அவரது ஆதரவாளர்கள். இதனால் மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதற்கான அனுமதியை டெல்லி மேலிடத்தில் கேட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பழவேற்காட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள இருந்த திருநாவுக்கரசர், திடீரென நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, டெல்லி பறந்தார். டெல்லியில் இருந்து ராகுலின் அழைப்பின் பேரில், அவர் பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலுடன், அவர் சென்றுள்ளதால், விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் வரும் என தெரிகிறது.