நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், வாய்ப்பிருந்தால் சட்டமன்ற தேர்தல்...என்று தமிழகத்தை இந்த தேசத்தின் சகலவிதமான தேர்தல்களும் முற்றுகையிட இருக்கிறது. இந்த நிலையில், எல்லா கட்சிகளும் எதிர்கட்சிகளைத்தான் எதிரிக்கட்சிகளாக நினைத்து அதிரடி எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் மட்டும், உட்கட்சிக்குள்ளேயே பங்காளிகளுக்கு எதிராக உள்ளடி அரசியலை பிய்த்து உதறிக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு பக்கா உதாரணம், பீட்டர் அல்போன்ஸின் அந்த ‘குஷ்பு கமெண்ட்’

தமிழக காங்கிரஸின் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரை அந்தப் பதவியிலிருந்து இறக்கிட அக்கட்சிக்குள் வி.ஐ.பி. நிர்வாகிகளிடையே பெரும் போட்டி நடக்கிறது. குறிப்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் துடியாய் துடிக்கிறார், இதை செயல்படுத்திட. அவருக்கு உறுதுணையாக குஷ்புவும் அரசருக்கு எதிராக அதிரடி சரவெடிகளை பற்றவைத்துக் கொண்டே இருக்கிறார். 

திருநாவுக்கரசருக்கு எதிராக திரண்டு நிற்கும் இந்த போர்மேகங்கள் பத்தாது என்று, மாஜி எம்.பி.யான பீட்டர் அல்போன்ஸும் களமிறங்கியுள்ளார். தமிழக காங்கிரஸுக்குள் நிகழும் அதிரடிகள், தேர்தல் கூட்டணிகள், கமலுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வாய்ப்புகள் ஆகியன பற்றி வெளிப்படையாக சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கும் பீட்டர், குஷ்பு பற்றி அடித்த கமெண்ட்  ஒன்றுதான் திருநாவுக்கரசரையே பி.பி. எகிற வைத்திருக்கிறது. 

அப்படி என்னதான் சொன்னாரு பீட்டரு?...

“தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவியாகும் தகுதி குஷ்புவுக்கு இல்லை! என்று நான் சொல்லிவிட மாட்டேன். மக்கள் விரும்பும் பெண்மணி அவர். அது மட்டுமெ ஒரு பேரியக்கத்தின் மாநில பதவிக்கு போதாதுதான். ஆனால் அதேவேளையில், மாநிலத்தின் சூழ்நிலை, காலத்தின் தேவை, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மாண்பு, ஸ்தாபன தகுதிகள், யார் தலைவராக வந்தால் நன்மை கிடைக்கும் எனும் அலசல் ஆகியவற்றை வைத்துத்தான் மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குஷ்புவிடம் அந்த பதவிக்கான தகுதிகள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.” என்று சரவெடி கமெண்ட் ஒன்றை தூக்கிப் போட்டிருக்கிறார். 

சத்தியமூர்த்தி பவனுள்ளே சரமாரியாக வெடிக்கிறது பீட்டரின் இந்த கமெண்ட். காரணம், இளங்கோவனுக்கு இணையாக குஷ்புவையும் மிக கடுமையாக எதிர்க்கிறார் திருநாவுக்கரசர். அப்பேர்ப்பட்ட நிலையில் இப்படியொரு கமெண்டை பீட்டர் எடுத்துவிட்டால், கடுப்பாகாமல் என்ன செய்வார் அரசர்?