thirumurugan gandhi emphasis do not repel poors

சென்னையில், ஆற்றங்கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி பேசியதாவது:

செப்டம்பர் 9 மற்றும் 15 அன்று, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மதுரவாயல், எம்.எஸ்.பி நகர் மற்றும் அமைந்தகரையிலிருந்து 347 குடும்பத்தை வலுக்கட்டாயமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. 

அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களுக்கு அப்பகுதிகளிலிருந்து வெகுதொலைவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான கள ஆய்வும் செய்யாமல் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 ஒருவர் வாழ்ந்த இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் வாழ வைத்தால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சில சமயம் அவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடுவதற்கான வாய்ப்புகூட உள்ளது. ஆக்கிரமிப்பு என குடிசை மக்களை மாற்றும் அரசு, அதே பகுதியில் இருக்கும் கார்ப்பரேட் மற்றும் வணிகக் கட்டடங்களை அப்புறப்படுத்த மறுக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அப்புறப்படுத்தப்பட்ட 12 குடும்பங்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.

நல்லதண்ணி குப்பம் பகுதியிலும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல மீனவக் குடும்பத்தினர் வெளியேற்றப்படுகின்றனர். இதற்கு மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் சர்வே எண், நடுக்கடலில் உள்ளது. 

2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் காரணமாகக் காட்டி சென்னை மாநகராட்சி நிர்வாகமும் குடிசை மாற்று வாரியமும் இணைந்து 55000 குடும்பங்களை இதுவரை அப்புறப்படுத்தியுள்ளது.

அடையாறு, கூவம், வடக்கு, தெற்கு, மத்திய பக்கிம்காம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். அதே வேளையில், கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. 

குடிசையில் வாழும் மக்களுக்குக் கொடுக்கப்படும் மாற்று இடமும் வெள்ளத்தால் பாதிக்கும் பகுதியாகவே உள்ளது. எனவே, ஏழை எளிய மக்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.