பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் நினைவாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலத் தமிழ் அகராதியை ஆண்டுதோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்த அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தமிழ் பதிப்புலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், பதிப்புச் செம்மல் என போற்றப்படுபவருமான க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா தொற்று அந்த மாபெரும் தமிழ் ஆளுமையையும் காவு கொண்டுவிட்டது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எமது அஞ்சலியையும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரெஞ்சு, ஜெர்மன் என பல்வேறு மூல மொழிகளில் இருந்து தமிழுக்கு பல படைப்புகளைக் கொண்டு வந்தவர். அதன் மூலம் தமிழ் உரைநடையில் புதிய எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர். சிறார் இலக்கியம், சூழலியல், மருத்துவம், தொல்லியல் என பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களை வெளியிட்டவர். பதிப்பாளராக மட்டுமின்றி, பிரதியை மேம்படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும், அவர் தமிழறிஞர்கள் பலரின் கால் நூற்றாண்டு கால உழைப்பின் விளைவாய் உருவான தற்கால தமிழ் அகராதியை வெளியிட்டார். 

கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக ஆட்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அகராதி ஒன்றை இலவசமாக தருவது என அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்களின் ஆங்கில மற்றும் தமிழ் மொழி அறிவை மேம்படுத்தும் விதமாகவும் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவாகவும்,12 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் க்ரியா வெளியிட்டுள்ள தற்கால தமிழ் அகராதியை இலவசமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். அதுவே க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு செய்யப்படும் சரியான அஞ்சலியாக இருக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.