நீண்ட மாரத்தான் இழுபறிக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டப்போது, தொடக்கம் முதலே திருமாவளவனும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர்.
வெற்றி என்பது மதில் மேல் பூனையாக இழுபறியில் சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் முடிவுகள் மாறிக்கொண்டிருந்தன. மாலையில் திருமாவளவன் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தபோது, அவர் வெற்றி உறுதியானதாக கருதப்பட்டது. ஆனால், இரவில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் மீண்டும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
இதனால், மீண்டும் இழுபறி ஏற்பட்டது. இறுதியாக இரவு 10 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் சுமார் 300 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை பெற்றார். இறுதியாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் திருமாவளவன் கூடுதல் வாக்குகளைப் பெற்றார். இறுதியாக 2969 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
மிகவும் நீண்ட இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைத்ததால் திருமாவளவனும் விசிகவினரும் நிம்மதி அடைந்தனர். ஏற்கனவே 2009-ல் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன், தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டபோது நீண்ட இழுபறிக்கு பிறகு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தது.