மன்றத்தில் ஜாதி, மத அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு இடமில்லை என்ற, நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் வருகையை அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்புகளுக்கு மத்தியில், கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். முதல்கட்டமாக தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து ரஜினி மக்கள் மன்றத்தைத் தொடங்கினார். மன்றத்துக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றத்துக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன. அதில் ஜாதி, மத அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடலூரில் நிருபர்களை சந்தித்த திருமாவளவனிடம், தனது ரஜினி மக்கள் மன்றத்தில் ஜாதி, மத அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இடமில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், அவரது முடிவு ஜனநாயக ரீதியானது. அதை வரவேற்கிறேன். அதை கடைசி வரை செயல்படுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

நடிகர் விஷால், புதிய அமைப்பை தொடங்கியது குறித்து திருமாவளவன் கருத்து கூறுகையில், ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பின், மக்களின் முடிவு அவர்களின் கையிலே தான் இருக்கிறது என்றார்.