தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவும், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளன. வட மாவட்டங்களில் இந்த இரு கட்சிகளும் பரம எதிரிகளாகவே கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

தற்போது தேர்தல் வேறு வந்துவிட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர். அண்மையில் பேசிய பாமக ராமதாஸ் திருமாவளவனை அறிமுகப்படுத்தியதே நான்தான் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திருமாவளவன், எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அ.தி.மு.க. பணத்தை இந்த தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணி பேரம் பேசி அமையவில்லை. அ.தி.மு.க. கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அமைந்தது என தெரிவித்தார்..

தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து அதை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும்.

ராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். பா. ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தேசத்தை காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார்.  ஆனால் உண்மையில் அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன் என அதிரடியாக தெரிவித்தார்..

இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை பார்க்க வில்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார் எனவும் திருமாவளவன் கூறினார்..