தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்திருந்தார். அப்போது தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், ம.தி.முகவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஊருக்கு ஊர் பேட்டி கொடுத்து வரும் திருமா, தாங்கள் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக கூறி வருகிறார். ஆனால் துரைமுருகனோ தி.மு.க கூட்டணியில் விசிக இல்லை என்கிறார்.

இதனால் திருமாவளவன் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வரும் நிலையில் கூட்டணியில் தாங்கள் இல்லை என்று துரைமுருகனை பேச வைத்து ஸ்டாலின் நெருக்கடி கொடுப்பதாக திருமாவளவன் கருதுகிறார். மேலும் சிதம்பரம் தொகுதியில் ஏற்கனவே 3 முறை தான் போட்டியிட்டுளள் நிலையில் அந்த தொகுதியை வி.சி.கவிற்கு ஒதுக்க தி.மு.க முன்வராததும் திருமாவளவன் அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேசிய திருமாவளவன், புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல் மெச்சும் படியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு அக்கறையுடன் பணியாற்றுவதாகவும் திருமாவளவன் புகழ்ந்து தள்ளியிருந்தார். சில இடங்களில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் வந்தாலும் அங்கு பொருட்களை அனுப்ப அரசு தீவிரமாக செயல்படுவது தெரிகிறது என்றும் திருமா பேசியிருந்தார்.

ஒரு எதிர்கட்சி தலைவரை போல் இல்லாமல் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியை போல் திருமா காரைக்குடியில் பேசியிருந்தார். இது தி.மு.க கூட்டணியில் தாங்கள் இல்லை என்று கூறியிருந்த துரைமுருகனுக்கும், அவரை அப்படி பேச வைத்த ஸ்டாலினுக்கும் கொடுத்த பதிலடியாகவே திருமாவளவன் கருதுவதாக சொல்லப்படுகிறது.